தென்மேற்கு பருவமழை ஜூன் 3ல் துவக்கம்: சென்னை வானிலை மையம்

 

தென்மேற்கு பருவமழை ஜூன் 3ல் துவக்கம்: சென்னை வானிலை மையம்

Share 
சென்னை-'தமிழகம் மற்றும் கேரளாவில், தென்மேற்கு பருவ மழை, வரும் 3ம் தேதி துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
அந்த மையம் கூறியுள்ளதாவது: நாட்டுக்கு அதிகமான மழை பொழிவை கொடுக்கும், தென்மேற்கு பருவ மழை, ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக பெய்யும். இந்த ஆண்டு, இயல்பான மழை பொழிவு இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக தென்மேற்கு பருவ மழை, கேரளாவில் ஜூன் 1ல் துவங்கி, படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கு பரவும். வங்கக்கடலில் சமீபத்தில் உருவான 'யாஸ்' புயலால், கேரளாவில் இன்று பருவ மழை துவங்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தென்மேற்கு பருவக்காற்று, நாளை முதல் தான் வலுவடைகிறது. எனவே, வரும் ௩ம் தேதி தான் தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கும். அதேநேரத்தில், வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகி கரை கடந்த பின், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை மற்றும் வேலுாரில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை, கடலுார், கரூர் பரமத்தி, நாகை, நாமக்கல், சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் நிலவியது. இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில், வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், மிதமான மழை பெய்யலாம்.


இன்றும் நாளையும் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கருத்துகள்