45 - 60 வயதினர் 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி: மத்திய சுகாதாரத் துறை

 புதுடில்லி: இன்று காலை நிலவரப்படி, நாட்டில் அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோவிட் 2வது அலை வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:

151வது நாள்!

ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று (ஜூன் 15) வரை 151வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களில் 9.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது 1.40 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள்