தடுப்பூசி போட்ட மாப்பிள்ளைதான் வேணும்!' - வைரலான மேட்ரிமோனியல் விளம்பரத்தின் பின்னணி தெரியுமா?

 

`தடுப்பூசி போட்ட மாப்பிள்ளைதான் வேணும்!' - வைரலான மேட்ரிமோனியல் விளம்பரத்தின் பின்னணி தெரியுமா?

Marriage

படிப்பை முடிச்சாச்சு… வேலையும் கிடைச்சாச்சு… அப்புறம் என்ன கல்யாணம்தானே” என மேட்ரிமோனியை நோக்கிப் படையெடுக்கும் மக்கள் ஏராளம்.

கல்வித் தகுதி, வயது, மதம், வகுப்பு இவற்றுடன் மணமகன் தேடும் பெண்ணின் விவரங்களுடன் வெளியான செய்தித்தாள் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. `இதெல்லாம் சகஜம் தானே… இதுல வைரல் ஆக அப்படி என்ன இருக்கு…’ என்பவர்களுக்கு இங்கேதான் ட்விஸ்ட்..! முதுகலைப் பட்டம், பொறுமைசாலி, நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம், நகைச்சுவை தன்மை… கூடவே கோவிஷீல்டு இரண்டு டோஸும் செலுத்திக்கொண்ட வரன் மட்டுமே அவரை அணுகுமாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ விளம்பரம் கொடுத்தவரின் போல்டான பதிவுக்கு வாழ்த்துகள் குவிய ஆரம்பித்தன.
கூடவே, காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் இந்த விளம்பரத்தைப் பற்றி, “இதைவிட சிறந்த திருமண பரிசு வேறு என்ன இருந்துவிட முடியும்; இப்படித்தான் இருக்கப்போகிறதா நமதுநியூ நார்மல்?” என்று ட்வீட் செய்தது, அந்த விளம்பரத்தை மேலும் வைரலாக்கியது.

இவை ஒரு பக்கம் இருக்க, இந்த விளம்பரத்தின் பின்னணியே வேறாம். கோவாவைச் சேர்ந்த சாவியோ ஃபிகியூரிடோ என்பவர் தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த செய்த மாயாஜால யோசனைதான் இது. விளம்பரத்தில் மணப்பெண்ணின் மொபைல் நம்பராகத் தன்னுடைய நம்பரையே குறிப்பிடவும் செய்திருக்கிறார் அவர். மணப்பெண்ணைப் பிடித்திருக்கிறது என கொல்கத்தா, ஒடிஷா, மங்களூர் போன்ற இடங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகள் சரமாரியாக குவியத் தொடங்கியிருக்கின்றன.

Marriage – Representational Image

இதுகுறித்து சாவியோ ஃபிகியூரிடோ பேசுகையில், “மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்துவதற்காக விளம்பரம் ஒன்றை வடிவமைத்து அதை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துகொண்டேன். அது உண்மையிலேயே மணமகன் தேடும் விளம்பரம்தான் என நம்பி பலரும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இப்படித்தான் விளம்பரமும் டிரெண்ட் ஆகியிருக்கிறது” என்கிறார் அவர். விளம்பரம் வைராலனதை அடுத்து… `விளம்பரம் உண்மையோ பொய்யோ.. ஆனா, அது சொல்லியிருக்குற கருத்து ரொம்பவே முக்கியம்’ என பலரும் தங்கள் கருத்துக்களைப்பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துகள்