வாடிவாசல்: கையெழுத்தானது பதிப்பாளர் - இயக்குநர் ஒப்பந்தம்! தமிழ்த் திரையுலகில் முதல் முறை?!
காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் இதுகுறித்துப் பேசும்போதும், “1959-ல் வெளியான ‘வாடிவாசல்’ நாவல் முதல் பதிப்பின் விலை ஒரு ரூபாய். ‘எழுத்து’ சிறுபத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு செல்லப்பா அவர்கள் இந்தப் பதிப்பை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகு இந்நாவல் தனி நூலாகப் பிரசுரமாகவே இல்லை. அவரும் பதிப்பிக்கவில்லை; வேறு யாரும் முன்னெடுக்கவில்லை. தொண்ணூறுகளின் பிற்பகுதில் செல்லப்பாவின் சிறுகதைகளின் தொகுப்பு ஓன்று வெளியாகி அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் நூலகங்களுக்கு விநியோகக்கப்பட்டன. அதில் ஒரு கதையாக இடம்பெற்றது ‘வாடிவாசல்’. பிறகு டி ஐ அரவிந்தன் முயற்சியில் வாஸந்தி ஆசிரியராக இருந்த காலத்தில் ‘இந்தியா டுடே’வின் இலக்கிய மலரில் அதை எடிட் செய்து, ஆதிமூலம் ஓவியங்களோடு பிரசுரித்தார்கள்.
1959-க்குப் பிறகு தனி புத்தகமாக, 2001-ல் இரண்டாம் பதிப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. காலச்சுவடு தனி புத்தகமாக இதை வெளியிட்ட காலத்திலிருந்து மிக நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. இப்போது 26-வது பதிப்பில் இருக்கும் ‘வாடிவாசல்’ ஆரம்பத்தில் ஒரு பதிப்பில் 1,200 பிரதிகளே அச்சிடப்பட்டது; ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு பதிப்பில் 2,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன. இது தவிர, பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்துக்கும் ‘வாடிவாசல்’ நாவலைக் கொண்டுசென்றிருக்கிறோம். காலச்சுவடு பதிப்பகத்தின் முன்னெடுப்பில், மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண்ராமனும் நானும் சேர்ந்து பணியாற்றியதன் பயனாக ‘வாடிவாசல்’ நாவல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் மூலம் ஆங்கிலத்தில் வெளியானது.
இப்படித் தொடர்ந்து நாவலைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால், செல்லப்பா அவர்களின் மகன் சுப்ரமணியன், நாவலின் திரைப்பட உரிமையையும் காலச்சுவடு பதிப்பகத்துக்கே வழங்கியிருந்தார். எங்கள் புத்தகங்களை அமெரிக்காவில் பிரசுரிக்க வகை செய்யும் இலக்கிய முகவர் ப்ரியா துரைசாமியின் சட்ட ஆலோசனையுடனும் அரவிந்தனின் ஆதரவுடனும் தற்போது நாவல் திரைப்படமாவதற்கான ஒப்பந்தத்தில் செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன், பதிப்பாளர், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருடன் கையொப்பம் இட்டிருக்கிறோம். இதற்கு முன்பே எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை திரைப்படமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருந்தாலும், ஒரு பதிப்பகத்துடன் முறையாக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் தமிழ் பதிப்பு, திரை உலகில் இதை முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கிறேன்” என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக